search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காய மூட்டை"

    புனே மாவட்டம் டாக்லிஜிகாசி என்ற ஊரைச் சேர்ந்த பெண் விவசாயி 32 மூட்டை வெங்காயத்தை வெறும் 4 ரூபாய்க்கு விற்றதால் கடும் வேதனை அடைந்தார். #Womanfarmer #Onion
    புனே:

    மராட்டியம் மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் அளவுக்கு அதிகமாகி விட்டதால், வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    சந்தைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருவதால் அவை தேங்கியுள்ளன.

    கடந்த சில தினங்களாக மராட்டியத்தின் முக்கிய நரங்களில் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாயாக உள்ளது. புனே உள்பட சில மாவட்டங்களில் வெங்காயத்தை சும்மா கொடுத்தால் கூட வாங்குவதற்கு யாரும் முன் வராத நிலை உள்ளது.

    இதனால் மராட்டிய மாநில வெங்காய விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடன் வாங்கி பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை நிலை குலைய செய்துள்ளது.

    இந்த நிலையில் புனே மாவட்டம் டாக்லிஜிகாசி என்ற ஊரைச் சேர்ந்த பெண் விவசாயி மனீஷா சஞ்சய் 32 மூட்டை வெங்காயத்தை விற்பதற்கு சந்தைக்கு எடுத்துச் சென்றார். ஆனால் 2 நாட்களாகியும் அவரால் அந்த 32 மூட்டை வெங்காயத்தை விற்க இயலவில்லை.

    நேற்று அந்த 32 மூட்டை வெங்காயத்தை மற்றொரு வியாபாரி 4 ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். 32 மூட்டை வெங்காயத்தை வெறும் 4 ரூபாய்க்கு விற்றதால் மனீஷா கடும் வேதனை அடைந்தார்.

    32 மூட்டை வெங்காயத்தை டிராக்டரில் ஏற்றிகொண்டு வந்த மனீஷா அந்த 4 ரூபாயை வைத்துக் கொண்டு பஸ்சில் கூட ஊருக்கு போக முடியாது என்று கண்ணீர் மல்க கூறினார். மிகவும் வேதனையுடன் காணப்பட்ட அவர் அந்த 4 ரூபாயையும் மத்திய வேளாண் அமைச்சருக்கு அனுப்பப் போவதாக கூறினார்.

    இதற்கு முன்பு சஞ்சய் சாத்தே என்ற விவசாயியும் 750 கிலோ வெங்காயத்தை 1064 ரூபாய்க்கு விற்றதால், அந்த பணத்தை பிரதமருக்கு அனுப்பிவைத்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் அந்த பணத்தை ஏற்க மறுத்து விட்டது.

    மேலும் மராட்டிய மாநில வெங்காய விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலை பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் வெங்காய விலை வீழ்ச்சி பற்றி மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். #Womanfarmer #Onion
    ×